மோடி மீண்டும் பிரதமராவதை விரும்பாத அந்நிய சக்திகளின் சதி!


இராம. ஸ்ரீனிவாசன்

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தை சித்தரிக்கும் விதமாக ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப் படத்தை பிபிசி வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தடையை மீறி மாணவர்களும், பல்வேறு அமைப்பினரும் அந்த ஆவணப்படத்தை திரையிட்டும் பார்த்தும் வருகின்றனர்.

ஆவணப்படம் இந்தியாவில் பலவிதமான உணர்வுகளை தூண்டிவிட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆயுதமாக கையில் எடுத்திருக்கின்றன. பாஜகவினரோ பிபிசியையும், அதன் தலைமையிடமான இங்கிலாந்தையும் கடுமையாக சாடி வருகிறார்கள். இப்படி இந்திய அரசியலிலும், சமூகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மோடி ஆவணப்படம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

பிபிசி வெளியிட்டிருக்கும் மோடி ஆவணப்படத்தை பாஜக எப்படிப் பார்க்கிறது?

2024-ல் மறுபடியும் மோடி பிரதமராக வந்துவிடுவார் என்பதை உலகம் அனுமானிக்கிறது. அப்படி மோடி பிரதமராக வருவதை விரும்பாத வெளிநாட்டு சக்திகள் சில இங்கே உள்நாட்டில் இருக்கிற சில சக்திகளோடு இணைந்து இப்படிப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.

இது இங்கிலாந்து நாட்டின் சதி என்கிறீர்களா?

பிபிசி இங்கிலாந்து செய்தி நிறுவனம். அதனால் அந்த சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. இல்லையென்றால் இங்கிலாந்து நாட்டு அரசாங்கம் இந்த விஷயத்தில் தங்களுடைய நிலை என்ன என்பதை உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இருநாடுகளும் சுமூகமான உறவில் இருக்கும்போது இந்திய நாட்டினுடைய பிரதமரை பிபிசி குற்றவாளி ஆக்குவதற்கு காரணம் என்ன... பின்னணி என்ன? இப்படிச் செய்வதன்மூலம் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ன ஆகும்? என அந்த நாட்டு அரசாங்கம் யோசித்துப்பார்த்து தெளிவுபடுத்த வேண்டும்.

இங்கிலாந்து அரசாங்கம் இதுவரை பிபிசி ஆவணப்படம் குறித்து எதுவும் சொல்லாதற்கு என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அவர்கள் சொல்லவில்லை என்பதால்தான் அவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். ஒருவேளை, அவர்கள் இதைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டார்கள் என்றால் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டினுடைய பிரதமரை குற்றவாளியாக்குவதை, அவர் மீது அவதூறு பரப்புவதை எப்படி கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள இயலும்? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பிரதமர் மோடி

இந்த ஆவணப்படத்தில் பிபிசி என்ன தவறு செய்திருக்கிறது?

கோத்ரா கலவரத்திற்கு காரணம் என்ன என்பதை பிபிசி முதலில் சொல்லியிருக்கிறதா? கலவரத்துக்கு அடிப்படை காரணம் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்தான். ரயில் எரிப்புச் சம்பவம் ஏன் நடந்தது... அதைச் செய்தது யார் என்பதையெல்லாம் ஆவணப்படத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட ராம பக்தர்களை ரயிலின் கதவுகளை மூடிவிட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது யார்? அதன் பிறகுதானே... அதனுடைய எதிர்வினையாக தானே கோத்ரா கலவரங்கள் நடைபெற்றது. கலவரம் குறித்து எடுத்துச்சொல்லும் பிபிசி, கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட விஷயம் குறித்து ஏன் சொல்லவில்லை? இதிலிருந்தே பிபிசியின் நோக்கம் என்ன என்பது தெரியவருகிறது

பிபிசியின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்கிற எண்ணத்தை இஸ்லாமியர் மத்தியில் விதைக்க வேண்டும். அதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தூண்ட வேண்டும் என்பதுதான் பிபிசியின் நோக்கமாக இருக்கிறது. இல்லையென்றால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் பற்றி இப்போது ஆவணப்படம் எடுக்கவேண்டியது ஏன்?

இந்தியாவை அவர்கள் ஆண்டபோது ஜாலியன் வாலாபாக்கில் அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்தார்களே அதைப்பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டியதுதானே? இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரை சிறையில் அடைத்தார்கள், எவ்வளவு பேரைக் கொன்று குவித்தார்கள் என்பதையெல்லாம் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டியதுதானே? அவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் காலனி ஆதிக்கத்தின்போது காலனி நாடுகளின் மக்களிடம் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், கொடுமைகள், அக்கிரமங்கள், காட்டுமிராண்டித் தனங்கள் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டியதுதானே?

அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும்போய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில்தான் இங்கிலாந்து இருக்கிறது. அந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை இங்கிலாந்து அப்போது செய்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மோடியை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி.

அப்படியானால்... கோத்ரா கலவரங்கள் குறித்து பேசவேகூடாது என்கிறீர்களா?

பேசக்கூடாது என்று சொல்லவில்லை. மோடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் வரைக்கும் சொல்லிவிட்டபிறகு, அதுவும் இருபதாண்டுகள் கழித்து இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேட்கிறோம். பல விசாரணை அமைப்புகள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் எல்லாம் வழக்கு நடைபெற்று முடிந்து, மோடி குற்றமற்றவர் என்று பசும்பொன்னாக வெளி வந்திருக்கிறார். ஆக, எல்லாம் முடிந்து போன நிலையில் மீண்டும் இப்போது எதற்காக அதைப் பெரிதுபடுத்துகிறார்கள்... ஆவணப்படம் எடுக்கிறார்கள் என்றுதான் கேட்கிறோம்.

மோடி தவறு செய்திருந்தால் உச்சநீதிமன்றமே அவரைத் தண்டித்திருக்கும். மாறாக, மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய போலீஸ் அதிகாரியைத்தான் உச்சநீதிமன்றம் தண்டித்திருக்கிறது. அவதூறு பரப்பிய பெண் பத்திரிகையாளரை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறதே தவிர மோடியை குற்றம் சொல்லவில்லை. இத்தனைக்கும் அப்போது மத்தியில் பாஜக ஆட்சி செய்யவில்லை; காங்கிரஸ் அரசாங்கம் தான் நடந்தது. அப்போதே மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

இராம. ஸ்ரீனிவாசன்

கோத்ரா கலவரத்தில் முஸ்லிம்கள் இறந்ததாக ஆவணப்படம் கூறுகிறது. கலவரத்தை அடக்க முனைந்தபோது முஸ்லிம்கள் மட்டும் அல்ல... இந்துக்களும் அப்போது உயிரிழந்திருக் கிறார்கள். மோடியின் போலீஸ் சுட்ட குண்டுகள் யாரையும் மதம் பார்த்துச் சுடவில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்களை குறிபார்த்துச் சுட்டது. அதில் இந்துக்களும் இறந்திருக்கிறார்கள். இதில் ஏன் மதம் பார்க்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி.

ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடையை மீறி பலரும் படத்தை திரையிடுகிறார்களே..?

அப்படி எங்கும் திரையிடப்படவில்லை. சில இடங்களில் திரையிடப்பட்டபோது அதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதை தமிழ்நாடு அரசு மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை திரையிடுவது என்பது தவறானது. அதை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். இதை ஒரு பாஜககாரரை அவமானப்படுத்தும் செயலாக மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு இந்தியரை, அதுவும் நாட்டின் பிரதமரை அவமானப்படுத்தும் கண்ணோட்டத்தில் தான் இதைப் பார்க்க வேண்டும்.

இந்தியர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?

ஒரு இந்தியரை வெள்ளைக்கார நாய் அவமானப்படுத்துகிறது என்கிற நோக்கத்தில்தான் இந்தியர்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும். விசாரணை அமைப்புகள், உச்ச நீதிமன்றம் ஆகியவை குற்றமற்றவர் என்று சொன்ன பிறகும் கூட ஒருவரை குற்றவாளி ஆக்கும், குறை கூறும், அவதூறு செய்யும் இந்த ஆவணப்படத்தை இந்திய மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். அனைவரும் இந்தியாவின் பக்கம், இந்திய பிரதமரின் பக்கம் இருக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு ஆவணப்படுத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் பிபிசியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் கட்சி வித்தியாசங்களைக் கடந்து இதைக் கண்டிக்க வேண்டும்.

x