பெண் போலீஸார் தாக்கினர்: திருச்சியில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு


கோவை மத்திய சிறையிலிருந்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் திருச்சிக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்.

திருச்சி/கோவை/சென்னை: கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்தபோது பெண் போலீஸார் தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டார்.

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பியாஸ்மின், திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, திருச்சி பெண் போலீஸார் திருச்சிக்கு நேற்று அழைத்து வந்து, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சவுக்கு சங்கர், "கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் போலீஸார் என்னைத் தாக்கியதுடன், ஏற்கெனவே முறிக்கப்பட்ட வலது கையை மீண்டும் முறுக்கி உடைத்தனர். அதை வீடியோ எடுத்தனர்" என்று நீதிபதியிடம் கூறினார். அதற்கு பெண் போலீஸார் மறுப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சங்கருக்கு காயம் உள்ளதா என மருத்துவர்கள் சோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்குமுழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மாலையில் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது அவரது வலது கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சங்கரை மே 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஒரு வழக்கு: இதற்கிடையில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் ரேஸ் கோர்ஸ் போலீஸில் அளித்த புகாரில், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் தியாகி முத்துராமலிங்கத் தேவர் குறித்து இழிவாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர். இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகளிர் ஆணையம் கடிதம்: பெண் போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 16 பெண் காவலர்கள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோர் தமிழ்நாடு மாநிலமகளிர் ஆணையத்தில் புகார்அளித்துள்ளனர். இதனடிப்படையில் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி, சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

x