விவசாயிகளுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக புகார்: குறைதீர் கூட்டத்தில் அமளி


விருதுநகர்: நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விருதுநகரில் இன்று நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரஜேந்திரன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்துறை சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள் பேசுகையில், “தற்போது வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதுகுறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா பேசுகையில், “தனியார் நர்சரிகளில் விதைத்தன்மை இல்லாத மா கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சப்போட்டா செடி வாங்கிச் சென்றால் அதில் வேறு காய் காய்க்கிறது. இனத் தூய்மை இல்லாத கன்றுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர், “இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் பேசுகையில், “தென்னையில் வெள்ளை ஈ நோய் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு ஏக்கர் தென்னையில் 20 முதல் 30 மரங்களில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட மரங்களைக் கணக்கெடுத்து உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் பேசுகையில், “அருப்புக்கோட்டை - மதுரை நான்கு வழிச்சாலையின் கிழக்குப் பகுதியில் திருச்சுழி கண்மாய்க்குச் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பேசுகையில், “ஆமத்தூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதையை மறித்து தனியார் நிறுவனம் சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, நீர்வழிப் பாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்த எங்களை அழைத்து விசாரணை நடத்தாமல் மாவட்ட நிர்வாகம் ஒரு தலைபட்சமாக நடந்துகொண்டுள்ளது” என்று கூறி மாவட்ட ஆட்சியர் முன்பாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. எந்தெந்த காரணங்கள் அடிப்படையில் இது சரியானது, தவறானது என்பதை விளக்கமாக குறிப்பிட்டு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். சட்டப்படி எது சரியோ அது உத்தரவாக பிறப்பிக்கப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு எதிராக முழக்கமிட்டவாறு கூட்ட அரங்கிலிருந்து நாராயணசாமி உள்ளிட்ட விவசாயிகள் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “அரசு நீர்வழித்தடத்தை பட்டா நிலம் என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். விவசாயிகளுக்கு விரோதமாக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார். எனவே, மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும் ஆகஸ்ட் 15ம் தேதி கருப்புக் கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

x