கர்நாடக அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு: ஒகேனக்கல் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை


தர்மபுரி: கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை, நுகு அணை ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கேஆர்எஸ் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், மொத்த தண்ணீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இன்று மதிய நிலவரப்படி தர்மபுரியில் உள்ள ஒகேனக்கல் பகுதிக்கு சுமார் 89 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கலில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீரின் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருக்குமானால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x