நெற்றியில் நாமம்; வாயில் கருப்பு துணியோடு சிங்கம்புணரி கவுன்சிலர்கள் போராட்டம் - கைக்குழந்தையுடன் பங்கேற்ற ஒன்றிய தலைவர்


சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய கவுன்சிலர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி, நெற்றியில் நாமமிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண் ஒன்றியத் தலைவரும் கைக் குழந்தையுடன் பங்கேற்றார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த திவ்யா பிரபு ஒன்றியத் தலைவராக உள்ளார். இங்கு அதிமுகவுக்கு 6 பேர், திமுகவுக்கு 2 பேர், தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒருவர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகள் போதிய நிதி ஒதுக்காததால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கபட்டுள்ளதாக கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் 2 திமுக கவுன்சிலர்கள் உட்பட 7 கவுன்சிலர்கள் இன்று காலையில் சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் முன்பாக வாயில் கருப்புத் துணி கட்டி, நெற்றியில் நாமமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபுவும், தனது கைக் குழந்தையுடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு, “நிதி ஒதுக்காததால் குடிநீர், சாலை போன்ற அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியவில்லை. இதனால் கவுன்சிலர்கள் வார்டுகளுக்குச் செல்ல முடியவில்லை” என்றார்.

x