சென்னை: வேளாண் நலத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து வேளாண் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளனர். இக்குழுவில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர், உயர் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
இந்த பயணத்தின் 2-ம் கட்டம்,ஆஸ்திரேலியா நாட்டின் ஹோபர்ட் நகரத்தில் உள்ள டாஸ்மானிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் அபூர்வா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மண் வள ஆராய்ச்சிகள் தொடர்பான உயர் தொழில்நுட்பங்கள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள், மின்னனு வேளாண்மை, உணவு பதப்படுத்துதலுக்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.