பள்ளிக்கரணை: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பை மறுசுழற்சி கிடங்கில், நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி. இயந்திரம் எரிந்து சேதமடைந்தது.
சென்னை பள்ளிக்கரணை மயிலைபாலாஜி நகரில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் குப்பை மறுசுழற்சி முறையில் உரமாக்கப்படுகிறது.
இந்த கிடங்கின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மீது நேற்று அதிகாலை 5.00 மணி அளவில் திடீரென தீ பற்றியது. பணியிலிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டபோது தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவியது. இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து துரைப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான குப்பை அள்ளும் சிறிய ரக ஜேசிபி வாகனம் தீயில் எரிந்து கருகியது. யாருக்கும் காயம்ஏற்படவில்லை. சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ பற்றியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸாரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.