சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு: ஸ்டாலின், எம்எல்ஏ-க்கள் வாதங்களை முன்வைக்க அனுமதி


சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்களுக்கு எதிராக அப்போதைய உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன்பிறகு 2-வது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸும் ரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் தரப்பிடம் இதுதொடர்பாக எந்த விளக்கமும் கோரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இ்ந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.மனுராஜ், இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ. கு.க.செல்வம் தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். மேலும் கு.க.செல்வம் காலமாகி விட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதித்த நீதிபதிகள், காலமாகி விட்ட கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்

x