கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை (ஜன.28) கடலூரில் வள்ளலார் 200-வது பிறந்த நாள் , ஜன.29 காலை சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, மாலையில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.தேவா, கடந்த 17 ,18 தேதிகளில் போலீஸில் மனு அளித்தார். இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீஸ் உத்தரவை ரத்து செய்து எழுச்சி பேரணி, மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.தேவா மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன், விசாரணைக்கு வந்தது. பேரணி நடத்த அனுமதி கோரும் ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சக்குப்பம் திடல் வரை சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி எனவும், பஸ், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால், ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி சென்று வரும் பகுதி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இப்பகுதியில் பிற மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால், பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பேரணி, மாநில மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்தார்.
மாநில மாநாட்டை ஜன. 29 மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.