கோவை, நெல்லை மேயர்களை தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சென்னை: கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் மேயர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியின் மேயராக கடந்த 2022ம் ஆண்டு கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 55 வார்டுகளை கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக பி.எம்.சரவணன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். திமுகவைச் சேர்ந்த இந்த இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த இரு மாநகராட்சிகளுக்கும் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பெண் மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் ஏராளமான பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. மேயர்களை தேர்வு செய்ய கவுன்சிலர்களிடையே மறைமுக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவி இடங்களை நிரப்பும் பொருட்டு, மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சியின் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் மேயர்களை தேர்ந்தெடுக்க உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும் ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்களை நடத்துவதற்கான கூட்டங்களை நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவலின்படி ஆகஸ்ட் 5ம் தேதி திருநெல்வேலிக்கும், ஆகஸ்ட் 6ம் தேதி கோயம்புத்தூருக்கும் மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

x