தெலங்கானாவில் இந்த ஆண்டும் குடியரசுத் தின அணிவகுப்பு இல்லை: என்ன காரணம்?


டெல்லி குடியரசுத் தின அணிவகுப்பு

தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடனான மோதலை அடுத்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குடியரசுத் தின அணிவகுப்பை ரத்து செய்துள்ளது அம்மாநில அரசு.

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக எடுத்துள்ள சந்திரசேகர் ராவ் மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்தச் சூழலில், அந்த மாநில ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல்போக்கு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டைப் போலவே அங்கும் சில மசோதாக்களை ஆளுநர் தமிழிசை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அதனால் ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அம்மாநில அரசு பெரும்பாலும் நடத்துவதில்லை. ஆளுநரை அழைத்து நடத்த வேண்டிய பெரும்பாலான விழாக்கள், நிகழ்வுகள் மாநில அரசால் தவிர்க்கப்படுகிறது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உரிய மரியாதையை மாநில அரசு வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆளுநர் தரப்பிலிருந்து பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தெலங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர்கள், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பதில் அளித்திருந்தார். ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலங்கானா போன்ற சில மாநிலங்களில் மட்டும் ஆளுநருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தெலங்கானா அரசு நெறிமுறைகளை மீறுகிறது.

சில மசோதாக்கள் என்னிடம் நிலுவையில் இருக்கின்றன. நான் அவற்றை மதிப்பீடு செய்து ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் அரசாங்கம் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. குடியரசுத் தின விழாவை நடத்துவது தொடர்பாக மாநில அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அரசியல் சாசன பதவிக்கும் ஆளுநர் நாற்காலிக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு பதிலடி தரும் விதமாக இந்த ஆண்டும் குடியரசுத் தின அணிவகுப்பை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குடியரசுத் தின அணிவகுப்பு அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாததால் ஆளுநர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மாநில அரசுக்கும் ஆளுநருக்கு இடையே நடக்கும் மோதல் முற்றுப்பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை.

x