காவல் நிலையத்தின் மீது விழுந்த ராட்சத மரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவலர்கள்


கேத்தி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ராட்சத மரம் ஒன்று காவல் நிலையத்தின் மீது விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக காவலர்கள் அனைவரும் உயிர்த்தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, உதகை, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சாலையோரம் உள்ள மரங்கள் அவ்வப்போது விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமான நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் சாலைகளில் விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறும், மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கேத்தி காவல் நிலையத்தின் அருகே ஏராளமான ராட்சத மரங்கள் உள்ளன. கடந்து சில நாட்களாக இங்கே பெய்து வரும் கனமழை காரணமாக இந்தப் பகுதியில் லேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் இன்று மதியம் காவல் நிலையத்தின் அருகில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தின் போது காவலர்கள் யாரும் மரம் விழுந்த இடத்தின் அருகே இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த காவல் நிலையத்தை சீரமைப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

x