சென்னை: உதய் மின் திட்ட நன்மைகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்றைய காலக்கட்டத்தில் மின் பகிர்மானக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நிலை, அதிக வட்டிக்கான கடனை திரும்பச் செலுத்துதல் உள்ளிட்ட வற்றுக்காக உதய் திட்டத்தை 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த அதிமுக அரசு ஒப்புக்கொண்டது.
இத்திட்டத்தின் மூலம் நிலுவையில் இருக்கும் ரூ.30 ஆயிரத்து 420 கோடி மின் பகிர்மான கழகத்தின் கடன் தொகையில், ரூ.22 ஆயிரத்து 815 கோடி கடன் குறைந்தது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 882 கோடி வட்டி சேமிப்பு ஏற்பட்டது. உதய் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதால், மின்பகிர்மானக் கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது.
அதிகவட்டிக் கடன் திரும்பச் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட வட்டி சேமிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு, மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து குறைந்த வட்டியில் பெறப்பட்ட கடன் ஆகியவற்றால் ஆண்டுக்கு சுமார் ரூ.11 ஆயிரம் கோடி சேமிப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. இன்றைய அளவில் மின்பகிர்மான கழகம் உயிர்ப்போடு செயல்படுவதற்கு காரணம் இந்த உதய் திட்டம்தான்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கட்சிரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பை பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில், அதிமுக அரசு கையெழுத்திட்டதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?
தமிழகத்தில் 3 ஆண்டு ஆட்சியில், 3 முறை கடுமையான மின் கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, இனியாவது மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.