சிங்கப்பூர் நிறுவன பங்குகளை வாங்கியதாக புகார்: அமலாக்கத் துறை நோட்டீஸை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


சென்னை: திமுக எம்பியும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சில்வர் பார்க் என்ற தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை கடந்த 2017-ம் ஆண்டு ஜூனில் ரூ. 32.69 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார்.

இதில் 45 லட்சம் பங்குகளை தனது மனைவி அனுசுயா பெயருக்கும், 22.5 லட்சம் பங்குகளை மகள் ஸ்ரீநிஷா பெயருக்கும், 2.5 லட்சம் பங்குகளை மகன் சந்தீப் ஆனந்த் பெயருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாற்றியுள்ளார்.

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாகக்கூறி இதுதொடர்பாக விளக்கமளிக்கக்கோரி அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மகள், மகன் மற்றும் அவருக்கு சொந்தமான அக்கார்டு மதுபான நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சேஷசாயி, மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர், “அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் அமலாக்கத்துறையினர் சட்டத்துக்குட்பட்டு இந்த நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கையை தொடர எந்த தடையும் இல்லை. அதேநேரம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

x