சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டதன் முன்னோட்டமாக, கட்சியில் மூத்த அமைச்சர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்து வழங்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் வரவிருக்கும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிகப்படியான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க திமுக வியூகம் அமைத்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ள நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்திருந்தன. எனவே 2026ம் ஆண்டு தேர்தலிலும் அதே வெற்றியை தக்க வைக்க திமுக வியூகம் வகுக்கத் துவங்கியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, உள்ளிட்டோர் மற்றும் 234 தொகுதிகளின் பொறுப்பாளர்களையும் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்து வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளைஞர் அணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் றெக்கைக் கட்டிய நிலையில், தற்போது அவருக்கு சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அதே கூட்டணியுடன் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலிலும் களமிறங்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற காங்கிரஸ் கட்சி விரும்புவதால், அது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கான வாய்ப்புகள், பாஜக மற்றும் அதிமுகவின் வியூகங்கள் ஆகியவை குறித்தும் தீவிர ஆலோசனைகள் திமுக முகாமில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக தனித்து 170-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெல்வது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை என்ற வரலாற்றையும் மாற்றியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.