ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காலிபாட்டில்களோடு களமிறங்கும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்


- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெபாசிட் தொகைக்காக காலி பாட்டில்களைப் பொறுக்க அந்த கட்சியின் வேட்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப். 27-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காக ஜன.31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் பணிகளைத் தொடங்காத நிலையில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.ஆறுமுகம் என்பவர் அத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்பதால் அதற்கான நிதியைப் பெறுவதற்காக டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

எதிர்வரும் 21-ம் தேதி முதல் காலிபாட்டில்களைப் பொறுக்கி சேகரித்து அவற்றை விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு டெபாசிட் தொகையைக் கட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

"காலி பாட்டில்கள் தான் எங்களுக்கு நிதி, டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்களுக்கு கதி" என்ற முழக்கத்தோடு காலிபாட்டில்களைப் பொறுக்கவும், ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தைச் சந்திக்கவும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தயாராகிவிட்டது.

x