விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப்பணி 10 நாட்களில் நிறைவுபெறும் - பொதுப்பணித்துறை தகவல்


விழுப்புரம்: ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணிகள் இன்னும் 10 நாட்களில் நிறைவுபெறும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1949-1950ம் ஆண்டில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலதுபுற பிரதானக் கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதானக் கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் ஆகிய மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் நீர் வரத்து உள்ளது. இதனால் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

2021ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவும், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்றுவந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, சேதமடைந்த அணைக்கட்டை மறுகட்டுமானம் செய்ய ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறை அரசாணை வழங்கியது. தொடர்ந்து அணையின் மறு கட்டுமானப் பணிகளை கடந்த 24.11.2023ம் தேதி ஆட்சியர் பழனி தலைமையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். இந்த அணைக்கட்டுப்பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இன்று பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலியமூர்த்தி, கலிவரதன், கடவம்பாக்கம் மணி உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா முன்னிலையில் அணையை ஆய்வு செய்தனர்.

அப்போது நம்மிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், “தடுப்பணையின் வடக்கு, தெற்கு கரையோரம் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு பாசன வாய்க்கால் அமைத்தால் தெளி, கப்பூர், லட்சுமிபுரம், ஏனாதிமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, திருவெண்ணைநல்லூர் ஆகிய கிராமங்கள் பாசனவசதி பெறும்” என்றனர்.

இதுகுறித்து பேசிய பொதுப்பணித்துறையினர், “பாசன வாய்க்கால் அமைப்பது தொடர்பாக திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தற்போது மறுகட்டுமானம் செய்யப்படும் தடுப்பணை, இன்னும் 10 நாளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த அணைக்கட்டின் மூலம் 35 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமும் மேம்படும்” என்றனர். அப்போது உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி பொறியாளர்கள் மனோஜ்குமார், விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x