திருநெல்வேலி: வனஉரிமைச் சட்டத்தை அமல்படுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமை பிரச்சினை முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக மாஞ்சோலையில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் நோக்கத்தோடு தமிழக அரசு பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பல்வேறு மாநிலங்களில் வனப்பகுதிதான் 20 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. தற்போது வனப் பாதுகாப்புச் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றால் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்களின் பிரச்சினையில் 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினாலே தீர்வு கண்டுவிடலாம். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க முடியும். வனத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். வனப்பகுதியில் பழங்குடியின மக்கள், பழங்குடியினர் அல்லாத மலைவாழ் மக்கள் என இரு தரப்பு மக்கள் வாழ்கின்றனர்.
வன உரிமைச் சட்டத்தின் படி 2002ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்கு முன்பாக 75 ஆண்டுகளாக வனம் சார்ந்து வாழும் மக்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற முடியாது. அவர்களை வெளியேற்றுவது தொடர்பாக யாராவது உத்தரவு பிறப்பித்தால், அவர்கள் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள். வன உரிமைச் சட்டத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இடமுள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து போன்ற பகுதிகள்தான் மாஞ்சோலை மக்களுக்கு பூர்விகம். 1882ம் ஆண்டிலேயே வனப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்படி இருக்கையில், 1929ம் ஆண்டு பிபிடிசி நிறுவனத்திற்கு எப்படி மாஞ்சோலை எஸ்டேட் பகுதி குத்தகைக்கு விடப்பட்டது என்பது தெரியவில்லை. 2018ம் ஆண்டு மாஞ்சோலை காப்புக் காடு என்று அறிவிக்கப்பட்ட உடனேயே ஏன் மக்களை வெளியேற்றவில்லை?.
குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில் திடீரென வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பாதை உள்ளிட்ட விவகாரங்களை பற்றிப் பேசுபவர்கள் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?. மாஞ்சோலை தொழிலாளர்கள் திட்டமிட்டு அடையாளம் இல்லாமல் அழிக்கப்படுகிறார்கள்.” என்றார்.
மேலும், “மாஞ்சோலையில் சூழல் சுற்றுலா அமைக்கப் போவதாக கூறுகிறார்கள். அங்கு சூழல் சுற்றுலா அமைக்கப்பட்டால் ஏராளமான வாகனங்கள் செல்லும். அப்படிப் போகும்போது வனவிலங்குகள் பாதிக்கப்படாதா?. மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றும் ஒற்றை நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது. மாஞ்சோலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆகியோர் அளித்துள்ள அறிக்கையை தமிழக அரசின் அறிக்கையாகவே பார்க்க வேண்டி உள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அங்கேயே இடங்களை வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இதற்காக சிறப்பு நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்து மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலை நாட்ட வேண்டும்.” என்றார்.