கேரளாவுக்கு கல்விச்சுற்றுலா செல்ல வேண்டாம்: நிபா வைரஸ் அச்சுறுத்தலால் எச்சரிக்கை


கோவை: கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருவதால் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை, கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டாம் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. நிபா வைரஸ் தொற்று காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நிபா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுவதால், கேரள மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் சார்பில் கேரள மாநில எல்லைகளில் தீவிர மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை மாவட்டம் கேரளாவிற்கு அருகில் உள்ளதால், அடிக்கடி இங்குள்ள கல்லூரிகளில் இருந்து கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகிறது. தற்போது நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் இவ்வாறு கல்வி சுற்றுலாவிற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

x