பட்ஜெட்டுக்கு கண்டனம் - பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!


சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, டெல்லியில் வருகிற 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, தமிழ் உள்ளிட்ட வார்த்தைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”வரும் 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையாக இல்லை. அரசியல் காரணங்களுக்காக பீகார், ஆந்திராவை ஆள்வோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் இது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும், “மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டியாக மாற்றிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி விகித குறைப்பு கூட புதிய வழிமுறையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு வஞ்சித்துள்ளது.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்துள்ளனர். மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.” என்று அவர் கூறினார்

x