கட்டுப்பாட்டை மீறும் கழக காரியஸ்தர்கள்... கலங்கித் தவிக்கும் ஈபிஎஸ்!


ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சிறு எதிர்ப்புக்கூட இல்லாமல் அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டுவந்தார் அவரது தோழி சசிகலா. ஆனால், கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை கப்சிப் என்று இருந்த கட்சிக்குள் அதன்பிறகுதான் அவருக்கு எதிராக சலசலப்புகள் கிளம்பின.

ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலாவின் சிறைவாசம், ஈபிஎஸ் முதல்வரானது என எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. அதேபோல சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என அனைவரையும் பின்னுக்குத்தள்ளி அதிமுகவை கிட்டத்தட்ட முழுவதுமாக தன் வசபடுத்தினார் ஈபிஎஸ். இந்த நிலையில், அவருக்கும் இப்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

கட்சிக்குள் அவருடன் இருப்பவர்களே தேவையற்ற சங்கடங்களை உருவாக்கி வருகிறார்கள். இரண்டாம்கட்டத் தலைவர்களாகவும், ஈபிஎஸ்ஸை வழிநடத்துகிறவர்களாகவும் கருதப்படும் தங்கமணியும், வேலுமணியும் எப்போதும் போல் இயல்பாக ஈபிஎஸ்ஸின் பின்னால் அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தாண்டி முன்வரிசைக்கு வரத் துடிக்கும் சிலரால் ஈபிஎஸ்ஸின் எண்ணங்களும், முயற்சிகளும் பின்னடவைச் சந்திக்க நேரிடுகின்றன என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில் பயணிப்பவர்கள்.

அதிமுக ஆட்சியின் நான்காண்டுகால ஆட்சி, அதற்குப் பின்னரான 20 மாதங்கள் என கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக கட்சி, ஆட்சி இரண்டிலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்த ஈபிஎஸ், அதையெல்லாம் கட்சியில் தனக்குப் பக்கபலமாக இருக்கும் இரண்டாம்கட்டத் தலைவர்ளை வைத்துச் சமாளித்து மேலே வந்துவிட்டார். இன்றைய நிலையில் ஈபிஎஸ் தான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல விஷயங்கள் மூலமாக மத்தியில் ஆளும் பாஜக வெளிக்காட்டி வருகிறது.

ஆனாலும் தங்களின் எதிர்கால திட்டம் கருதி வெளிப்படையாக அதை உறுதிசெய்யாமல் வைத்திருக்கிறது பாஜக. அதனால் சட்டரீதியான சிக்கல்கள் ஈபிஎஸ்ஸுக்கு இன்னமும் நீடிக்கிறது. அதனையும் சரிசெய்யும் வேலைகளில் அவர் இறங்கியிருக்க, அவருக்குக் கீழிருப்பவர்களால் அந்த முயற்சி பின்னுக்கு இழுக்கப்படுகிறது என்கிறார்கள்.

அவர்களில் முதலாவது நபராக இருப்பது முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பிருமான சி.வி.சண்முகம். பாஜகவை ஈபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸை பாஜகவும் தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலைகளை கவனமாக பார்த்துக் கொண்டிருக்க, இரண்டிற்கும் இடையில் திரியைக்கொளுத்தி வீசினார் சண்முகம். “மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கப்போகிறது” என்று சண்முகம் பேசியதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டுவது என்று தெரியாமல் ஈபிஎஸ் தவித்துப்போனார்.

இந்த விஷயத்தில் ஈபிஎஸ் அமைதிகாத்தாலும் பாஜக பாய்ந்தே விட்டது. “யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை” என்று கூறிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, சண்முகம் ’நிதானமில்லாமல்’ பேசியதைக் கண்டித்தார். “சண்முகம் எப்போது பாஜகவில் சேர்ந்தார்” என்று பகடி செய்த பாஜக தலைவர் அண்ணாமலை, “மூன்றாம் கட்ட பிரமுகர்கள் பேசியதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்று சொன்னார். ஆனாலும் இந்த விஷயத்தை டெல்லிவரை அவர்கள் கொண்டுபோயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாஜகவுடன் இனியும் கூட்டணி தொடர்வதை விரும்பவில்லை ஈபிஎஸ். ஏதாவது கலகம் பிறந்து அவர்களாகவே கழன்றுபோய்விட மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஈபிஎஸ்ஸுக்கு சண்முகத்தின் பேச்சால் உண்மையில் சங்கடம் ஏதும் இல்லை. ஆனால், சண்முகத்தின் பேச்சுக்குப் பின்னால் ஈபிஎஸ்ஸின் மீது அவருக்கு இருக்கும் மனக்கசப்பும் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களாக தங்கமணியும் வேலுமணியும் இருக்கிறார்கள். அவர்களோடு கே.பி.முனுசாமி போன்றவர்கள் இணைகிறார்கள். கூட்டங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் அவர்களுக்கே முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. தன்னை அப்படி இரண்டாம் கட்டத்தலைவராக ஈபிஎஸ் இன்னும் மதிக்கவில்லை என்பதும் சி.வி.சண்முகத்துக்கு இருக்கும் வருத்தம். ஈபிஎஸ்ஸுக்கு அடுத்து தான் தான் என்ற நிலையை எட்டிப்பிடிக்க நினைக்கிறார் சண்முகம். அதனால் எல்லா இடத்திலும் முந்திக்கொண்டு ஏதாவது கருத்துகளைக் கூறி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் விரும்புகிறார். அதற்காகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை பட்டென்று பேசி விடுகிறார் என்கிறார்கள்.

ஆனால், பாஜக விவகாரத்தில் சண்முகம் அப்படி வெளிப்படையாகப் பேசி பாஜகவை சீண்டி இருக்க வேண்டாம் என்பது ஈபிஎஸ் தரப்பின் ஆதங்கம். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பாஜக செயல்படக்கூடாது என்பதற்காக அவர்களை வழிக்குக் கொண்டுவரும் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது ஈபிஎஸ் டீம். இந்த நேரத்தில் சண்முகம் போன்றவர்கள் இப்படிப் பேசி பாஜகவை எரிச்சலூட்டினால் அது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான நகர்வுகளை ஊக்கப்படுத்தும் என்பது அவர்களின் அச்சம்.

கட்சியும் இரட்டை இலை சின்னமும் பாஜகவின் பிடிக்குள் இருப்பதால் முள்மேல் விழுந்த சேலையை எடுப்பதுபோல் பக்குவமாகத்தான் பாஜகவிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று ஈபிஎஸ் விரும்புகிறார். ஆனால், கூட்டணியில் இனியும் பாஜக இருந்தால் தமிழகத்தில் தங்களுக்கான வெற்றிவாய்ப்பு பாதிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சண்முகம். அதனால் தான் பாஜகவை வெளியேற்றும் விதமாக அவர் பேசிவருகிறார்.

இந்த விஷயத்தில் தனது கருத்தை ஈபிஎஸ் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்ற வருத்தம் சண்முகத்துக்கு இருக்கிறது. அதனால் தான் டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்த மெரினாவுக்கு தாமதமாக வந்தாராம் சண்முகம். அதுமட்டுமில்லாமல், அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்த விழுப்புரம் வடக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்களைக்கூட ஈபிஎஸ்ஸுக்கு எந்தத் தகவலும் சொல்லாமல் தனது முன்னிலையிலேயே கட்சியில் இணைத்துக்கொண்டாராம். விஷயம் தெரிந்து மேலிருந்து கேட்ட பிறகே இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் இருவரையும் ஈபிஎஸ்ஸிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

சி.வி.சண்முகம்

அடுத்ததாக ஈபிஎஸ்ஸுக்கு சிக்கல் வந்திருப்பது ஜெயக்குமாரால். பாஜகவுடனான இணக்கத்தை சண்முகம் உடைக்க, தன்பங்குக்கு பாமகவுடனான உறவை பதம் பார்த்திருக்கிறார் ஜெயக்குமார்.

அதிமுக நான்காக உடைந்திருக்கிறது என்று அன்புமணி பேசியிருந்த நிலையில், அதற்கு பதில்சொல்கிறேன் என்ற பெயரில் பாமகவுக்கு எதிரான அனல் வார்த்தைகளை வீசினார் ஜெயக்குமார். “பாமக ஏறிவந்த ஏணி அதிமுக. அதிமுக இல்லையென்றால் பாமக இல்லை. பாமகவுக்கு அங்கீகாரம் கிடைக்கக் காரணமே ஜெயலலிதாதான் என்பதை மறக்க வேண்டாம்” என்று பாமகவை சீண்டினார் ஜெயக்குமார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாமக, “அதிமுக வீழ்ந்துகிடந்த போதெல்லாம் அதற்கு தோள்கொடுத்தது பாமகதான், அதை அதிமுக மறந்துவிட வேண்டாம்” என்று கடுமையாக ரியாக்ட் செய்தது. ஜெயக்குமார் எடுத்து வீசிய கணைகளால் அதிமுக- பாமக பிணைப்பு முற்றிலுமாக சிதைந்து போயுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பது ஈபிஎஸ்ஸின் கனவு. அதற்காக அவர் அரும்பாடுபட்டுவரும் நிலையில் தனக்கு வெகு இணக்கமாக இருக்கும் பாமகவை தன்னிடமிருந்து விலக்கும் வேலையை ஜெயக்குமார் பார்த்திருப்பது ஈபிஎஸ்ஸுக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் “ அப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று ஜெயக்குமாரையும் அவரால் கண்டிக்க முடியவில்லை.

வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமக, கொங்கு மண்டலத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் மூலமாக இரண்டு பகுதிகளிலும் பெருவெற்றியை பெற்றுவிடலாம் என்பது ஈபிஎஸ்ஸின் கணக்கு. ஜெயக்குமாரின் பாமக விமர்சனத்தால் அந்தக் கணக்கும் கைகூட வாய்ப்பில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. ஏற்கெனவே, திமுகவை நெருங்குகிறது பாமக என்று சொல்லப்படும் நிலையில், ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு தேவையற்றது என்பது ஈபிஎஸ் தரப்பின் வாதம்.

ஜெயக்குமார் உடனடியாக அவசரப்பட்டு இப்படி பேசியிருக்க வேண்டியதில்லை என்று கருதுகிறாராம் ஈபிஎஸ். பாமக எப்போதுமே தனது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரைக்கும் இப்படித்தான் முறுக்கிக்கொண்டு நிற்கும். ராமதாஸை நேரில் சந்தித்து அவர்கள் விரும்புகிற விதமாகப் பேசினால் எல்லாம் சுமூகமாக முடிந்து விடும் என்பது ஈபிஎஸ்ஸின் கணிப்பு. இந்த நிலையில், ஜெயக்குமார் இப்படிப்பேசி சிக்கலைக் கூட்டிவிட்டார் என்று ஈபிஎஸ்ஸும் வருந்துவதாகத் தகவல்.

ஜெயக்குமார்

அடுத்ததாக அலப்பறையைக் கூட்டுகிறவர் தெர்மோகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு. திமுகவை எதிர்த்து உருவான அதிமுகவில் திமுக எதிர்ப்பு என்பதுதான் தாரகமந்திரம். திமுகவினரிடம் பேசியதாகத் தெரிந்தாலே அவர்களை கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. மு.க.அழகிரியுடன் ஒரு திருமணத்தில் ஒன்றாக கைகுலுக்கியதாக தரப்பட்ட போட்டோ ஒன்றை ஆதரமாக வைத்தே செல்லூர் ராஜூவை பொறுப்பில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அப்படியாகப்பட்ட செல்லூர் ராஜூ, உதயநிதி அமைச்சரானதற்கு வரவேற்பு தெரிவித்தார். “தற்போதைய திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறைக்கு இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதனால் விளையாட்டுத்துறைக்கு நிறையச் செய்வார்கள்” என்று திருவாய் மலந்தார் ராஜூ. இது தங்களுடைய அடிப்படைக் கொள்கையையே அசைத்துவிடும் என்று பயப்படுகிறார் ஈபிஎஸ்.

செல்லூர் ராஜூ

பாஜக தயவு இருந்தால் தான் அதிமுக சட்டரீதியாக தனது கைக்கு வரும். பாமக உள்ளிட்ட கட்சிகள் உடனிருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றிபெற்று அதிமுகவை நிலைக்கச் செய்ய முடியும். திமுக எதிர்ப்பு இருந்தால் மட்டுமே அதிமுக தொண்டர்களிடம் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற முடியும் என்று கருதுகிறார் ஈபிஎஸ். ஆனால், தன்னுடைய தளகர்த்தர்கள் கட்டுப்பாட்டை மீறி இப்படியெல்லாம் பேசி அதையெல்லாம் தகர்த்துவிடுவார்களோ என்ற கவலை இப்போது அவரை வதைக்க ஆரம்பித்திருக்கிறது.

அதிமுகவுக்குள் இப்படி ஆளாளுக்கு நடத்தும் களேபரங்களை அந்தக் கட்சியை இரண்டாக, மூன்றாக பிரித்துவைத்து அரசியல் பொம்மலாட்டம் நடத்த நினைக்கும் திமுகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது!

x