கூடங்குளம் அணு உலை பகுதியில் சுற்றித்திரிந்த 6 ரஷ்யர்கள் - போலீஸார் தீவிர விசாரணை


திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலை பகுதி அருகில் சுற்றித் திரிந்த 6 ரஷ்யர்கள் மற்றும் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலை பகுதியில் வள்ளியூரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர் ஆகியோருடன் ஒரு பெண் உட்பட ரஷ்யர்கள் 6 பேர் நேற்று சுற்றித் திரிந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கூடங்குளம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்களிடம் போலீஸார் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் மேலும் கூறுகையில், "தங்கள் கிராமத்தில் சில வெளிநாட்டவர்கள் சுற்றித் திரிவதை கவனித்த இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தொடர்புடையவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்ட இரண்டு 1,000 மெகாவாட் அணு உலைகள் உள்ளன. மேலும் இதே போன்ற நான்கு அலகுகள் அதே வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ரஷ்யர்கள் 6 பேர் சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x