இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட என்ன வழி? - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் யோசனை


இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கொடைக்கானலில் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா கொடைக்கானல் வந்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.., “43 ஆண்டுகளுக்கு பின் இங்கு வந்தது மகிழ்ச்சி. எம்ஜிஆருடன், நானும் அன்னை தெரசாவும் கொடைக்கானலுக்கு வந்த பசுமை நினைவுகளை இன்று நினைவு கூர்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்கிறது. ராஜூரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன், தீவிரவாத தாக்குதல் நடந்து உள்ளது. அங்கு தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ராகுல் காந்தியின் யாத்திரை இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அரசியல் நகர்வுகளை ராகுல் காந்தி சிறப்பாக செய்து வருகிறார். பன்முகத்தன்மை, பல மொழிகள், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில், ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி-20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும். மோடியும், பாஜகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கோ விவாதம் செய்யவோ அனுமதிப்பதில்லை. கல்வி, சுகாதாரம், சாலை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. சிறந்த முதல்வராக. செயல்பட்டு வரும் ஸ்டாலினை பாராட்டுகிறேன்” என்றார்.

x