ஈரான் அதிபர் மரணம் முதல் தங்கம் மீதான ஆர்வம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் @ 11.30 AM


> ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விபத்தில் உயிரிழப்பு: ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அதன் உடைந்த பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.


> 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார், ஃபர்ஹான் அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர்.

> குமரியில் விடிய விடிய மழை | வெள்ள அபாய எச்சரிக்கை: குமரி மாவட்டத்தில் கொட்டி வரும் கோடை மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

> காட்டாறுகளில் வெள்ளம்: 9 கிராம மக்கள் பாதிப்பு: தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அருகே கனமழை காரணமாக சித்தேரி மலையில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலசப்பாடி உள்ளிட்ட 9 கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

> கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் புளியஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


> மீன்பிடி தடையால் மீன்கள் விலை அதிகரிப்பு: ஆழ்கடலில் மீன்களின் இனப் பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதனால், காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரித்தது.


> தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு: நிதி வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்துக்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


> பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை: சென்னையில் மாநகர பேருந்து வருகை நேரங்களை பயணிகள் அறியமாநகராட்சி சார்பில் 532 இடங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட உள்ளன. அதற்காக 8 இடங்களில் சோதனை அடிப்படையில் நிறுவி கண்காணிக்கப்பட்டு வருகிறது.


> கோவையில் நூதன முறையில் கஞ்சா விற்பனை: கோவையில் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள், உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.


> போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற பெண் கைது: இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயல்வதாக குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நடந்த சோதனையில் சங்கீதா என்ற பெண், இந்திய பாஸ்போர்ட்டை போலியாக வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.