மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழிபோடுகிறது தமிழக அரசு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு


தமிழக அரசைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. | பட ம் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மின்னுற்பத்தியை பெருக்காமல் தனியாரிடம் மின்சாரம் வாங்கும்போது, ஊழல், முறை கேடுகளுக்கு வழிவகுக்கிறது. அதற்கு ஆகும் செலவு, மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மக்கள்தலையில் விழுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணை யாமல் செய்து, பழனிசாமியை தனியாக போட்டியிட வைத்து, தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருகிறது. ஆட்சியில் திமுக எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. நிர்வாக திறமையின்மையால் ஏற்பட்ட கடனை மக்கள் மீது சுமத்துவதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழி போடுகிறது.

2026 தேர்தலில் வலுவான தேசியஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எதிர்கட்சிகள் பிளவு பட்டு இருப்பதால் திமுக எளிதில் வெற்றி பெற்று வருகிறது. அதை 2026 தேர்தலில் மாற்றி காட்டுவோம்.மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கரிகாலன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x