தொடர் சர்ச்சைகள் காரணமாக தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்று சிலர் செய்திகளைச் சுற்றவிடுகிறார்கள். ஆனால், யதார்த்தம் என்னவோ அப்படி இல்லை என்கிறார்கள். அண்மையில் கோவை வந்திருந்த பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை குறித்து சிலர் அதிருப்திகளை அடுக்கினார்களாம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், “நீங்கள் என்ன சொன்னாலும் 2026 வரை அண்ணாமலை தான் தலைவராக இருப்பார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அவர் மத்திய அமைச்சரே ஆனாலும் அவரே மாநில தலைவராக நீடிப்பார். ஆகவே, இனிமேல் யாரும் அண்ணாமலையை மாற்றச் சொல்லி டெல்லிக்கு பெட்டிஷன் போடாதீர்கள்” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டாராம். இந்த விஷயத்தை இப்போது தெம்பாக வெளியில் சொல்லி வருகிறது அண்ணாமலை விசுவாச வட்டம்!