வடசென்னை மக்களின் பயன்பாட்டுக்கு பொதுப்பணி, நீர்வளத் துறை இடங்களில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு


சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக, நீர்வள ஆதாரத் துறை, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களில் சென்னை பெரு நகரவளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஸ்டான்லிமருத்துவமனை அருகில் உள்ள நீர்வள ஆதாரத் துறைக்கு சொந்தமான பணிமனை (ம)பண்டகசாலைஇடம் மற்றும் வால்டாக்ஸ் ரோடு,தண்ணீர் தொட்டி தெருவில் உள்ளபொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பயன்படுத்தாத பழைய பொது பண்டகசாலை இடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாட்டர் பேசின்ரோடு எனப்படும் தண்ணீர் தொட்டிதெருவில் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் 6 ஏக்கர் நிலம்உள்ளது. அதேபோல், ஸ்டான்லிமருத்துவமனை அருகில் உள்ளபணிமனை இடங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் ஆய்வு செய்தோம்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை, ரூ.4,378 கோடியில் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் 208 பணிகளில் 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீதியுள்ளபணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் அந்தந்த துறைகள் சார்பில் நடைபெற்று வருகின்றன.

இதில், சிஎம்டிஏ ரூ.685 கோடி செலவில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ரூ.4378 கோடியில், ரூ.1,619 கோடியை சிஎம்டிஏ தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது. இத்திட்டங்கள் நிறைவுறும்போது, வடசென்னை பகுதிமக்களுடைய வாழ்வாதார தேவைகள் முழுமையாக நிறைவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, மாநகராட்சி வடக்கு வட்டார துணைஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

x