எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: தாமாக முன்வந்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் கருத்து


சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்துவிசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 19-ம் தேதி வெள்ளிக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததின்பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மோதலை போலீஸ் தடுக்கவில்லை: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொள்ள கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு அமர்வில் முறையீடு செய்தார்.

அப்போது அவர், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் கடுமையான மோதல் நடைபெற்றபோதிலும், அந்த நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீஸார் அவர்களின் மோதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக துயர சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

x