சென்னை: டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்க முடியுமா என்பது குறித்து அரசின் பதிலை கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரும், வனவிலங்குகள் ஆர்வலருமான எஸ்.முரளிதரன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில், ‘தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற தகவல் மூலமாக கடந்த 2020 – 21-ம் ஆண்டு ரூ. 39ஆயிரத்து 760 கோடியும், 2021 – 22-ம் ஆண்டில் ரூ. 42 ஆயிரத்து 421 கோடியும் மதுபான விற்பனை மூலமாக வருவாய் ஈட்டியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் முறையே ரூ.161 கோடியும், ரூ.69 கோடியும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறுவது ஏற்கும்படியாக இல்லை. இதன்மூலம் டாஸ்மாக்கின் நிகர லாபம், வேறுபக்கம் திசை திருப்பி விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பலஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கில் குறைந்தபட்சம் 3 முதல் 5 சதவீதம் சுரண்டப்படுகிறது. மதுபான விற்பனை மூலமாக டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும்நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களுக்கே சொந்தமானது என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில தரம் குறைந்தமதுபானங்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இதன்மூலம் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழல் நிலவுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரம், வெளிமாநிலங்களில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தைவிட குறைவாக இருப்பதால் சென்னை விமானநிலையத்தில் மதுபானம் வாங்க அதிகமாக யாரும் ஆர்வம் காட்டுவது கிடையாது. மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான உதிரி வருவாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர்என அனைவருக்கும் பங்கு செல்கிறது. எனவே மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ள விற்பனை விலையைவிட கூடுதலாக விலை கொடுக்க வேண்டாம் என எல்லாடாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்புபலகை வைக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் தமிழகத்தில் கள்விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
தரமான மதுபானங்களை நாடுமுழுவதும் உள்ள மதுபான ஆலைநிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். குறிப்பாக கள் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 1986-ம் ஆண்டுகொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதித்து கடந்த 2003-ல்கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நீதிபதி கே. குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், மதுபானங்களை எங்குவிற்க வேண்டும், எங்கு விற்கக்கூடாது என்பது குறித்து முடிவு எடுப்பதும், தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்குவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பதும் அரசின் கொள்கை முடிவு. இதில் யாரும் தலையீடு செய்ய முடியாது என்றார்.
அப்போது மனுதாரர் ஆஜராகி, டாஸ்மாக் மதுபான விற்பனையில் தினமும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்றார். அதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் முறைகேடுநடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றனர்.மேலும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது என்பது அரசின் கொள்கைமுடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளில் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்க முடியாத ஏழை, எளிய மக்களுக்காகவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் கள்ளுக்கான தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரி சீலனை செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுதொடர்பாக விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29-க்கு தள்ளி வைத்துள்ளனர்.