இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள்: அண்ணாமலை நம்பிக்கை


கோவை: தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள், மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகசார்பில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பாராட்டு விழா மற்றும்ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில்பங்கேற்ற மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவிலுள்ளகுற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2047-ல் இந்தியாவை வளர்ச்சிஅடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும். தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஜிஎஸ்டி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில்குறு, சிறு தொழில்நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டண உயர்வுக்கு, மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை ஏற்க முடியாது. அதேபோல, பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டுப் பேசுவதும் சரியல்ல. திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் தமிழகத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக பாஜகவின் விவசாயப் பிரிவு சார்பில் குழு அமைக்கப்படும்.

திமுகவில் 112 பேர் முக்கியகுற்றங்களில் ஈடுபட்டவர்களாகஉள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குற்றப் பின்னணி கொண்ட திமுக பிரமுகர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரங்கள் உள்ளன.

சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவில் உள்ள சம்ஸ்கிருதம், ஹிந்தி மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே, நிதி ஒதுக்கப்படுகிறது. ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதால், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கான பல்கலைக்கழகங்களை அதிகம் உருவாக்க, தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்

x