2019 - 2020ல் அதிமுக ஆட்சியில் வழங்கிய கலைமாமணி விருதுகள் தொடர்பாக புதிய குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு கோரியிருந்தார்:
’ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்குட்பட்டோருக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டோருக்கு கலை முதுமணி விருது வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை. 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 2021, பிப்.20-ல் சென்னையில் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாதோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலர், தலைவரின் கையெழுத்து இன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தகுதியில்லாதோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தகுதியில்லாதோருக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவின் கோரிக்கை அமைந்துள்ளது.
இந்த மனு ஏற்கெனவே இரு முறை விசாரணைக்கு வந்தது. பின்னர் ’2019 - 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது ’2019 - 2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கிய கலைமாமணி விருதுகள் தொடர்பாக புதிய தேர்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று உத்தரவிட்டார்.