‘மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு, ஓ.பி.எஸ் தலைமையை எடப்பாடி ஏற்கட்டும்’


புகழேந்தி

”எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஓ.பி.எஸ் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும்” என ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க, அவரது ஆதரவாளரும், கொள்கை பரப்புச் செயலாளருமான புகழேந்தி பெரியகுளம் வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையர் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்க மறுக்கிறது. அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை. மாநில தேர்தல் ஆணையர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தின்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கு அப்பதவிகளில் தொடர்கின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் இபிஎஸ் தரப்புக்கு அனுப்பிய கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு அனுப்பியதற்கு, முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலே காரணம்.

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா. அவரது காலில் விழுந்ததால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடிந்தது. சசிகலாவை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு தகுதி கிடையாது. பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என அரசுக்கு முதலில் கோரிக்கை விடுத்தது ஓ.பி.எஸ்!

எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைகளுக்கு முதலமைச்சர்
இதுவரை செவியும் சாய்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஓ.பி.எஸ் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். விருப்பம்” என்று தெரிவித்தார்.

x