கொடிக்கம்பம் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த வழக்கு: திமுகவுக்கு நீதிமன்றம் உத்தரவு


சென்னை: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க திமுக சார்பில் கொடிக்கம்பம் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க, திமுக சார்பில் கொடிக்கம்பம் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

இதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகுதான் பேனர்கள் வைக்கப்படும் என, அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், முதலாவதாக திமுக தரப்பில் தங்களது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

x