தஞ்சையில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்: 2வது பெண் ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்பு!


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசின் உயர் பதவிகளில் பெண்கள் அதிகாரிகளாக பதவி வகித்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.

பழமையான தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது பெண் மாவட்ட ஆட்சியராக பா.பிரியங்கா பங்கஜம் இன்று காலை பொறுபேற்றார். பொறுப்பேற்றதும், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விவசாயம் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். ஒவ்வொரு கோரிக்கை மனுக்கள் மீதும் பொதுமக்களின் ஆயிரம் கண்ணீர் துளிகள் இருப்பதால், அதை அதிகாரிகள் தீர்த்து வைக்க போதிய அறிவுரைகள் வழங்கப்படும்” என்றார்.

பெண் அதிகாரிகள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீமோகனா, வருவாய் கோட்டாட்சியர்களாக தஞ்சாவூர் செ.இலக்கியா, கும்பகோணம் பூர்ணிமா, பட்டுக்கோட்டை ஜெயஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுஜாதா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சித்ரா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உதவி காவல் கண்காணிப்பாளர் ஷஹானாஸ் ஆகியோர் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x