என்எல்சி விரைவில் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது. அதற்காதத்தான் நிலம் எடுக்கும் முயற்சி வேகமாக நடைபெற்றுவருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அருகே தமிழக எல்லையான நாவற்குளம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்," நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியாகும். நம் இலக்கை நோக்கி வேகமாக செல்ல பதவி முக்கியமாகிறது. 16 வருடமாக தொடர்ந்து நிழல் நிதி அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்துவருகிறார்கள். ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை செய்தியை பார்த்துதான் தெரியவருகிறது. ஒருவர் வாட்ச் காட்டுகிறார். ஒருவர் அடுக்குமொழியில் பேசுகிறார். நமக்கு தெரிந்தது வளர்ச்சி அரசியல். நமக்கான அங்கீகாரம் வரும். தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை. களம் நன்றாக உள்லது. அதிமுக நான்காக உடைந்துள்ளது. திமுக மீது பலமான விமர்சனம் உள்ளது. மற்ற கட்சிகளின் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.
தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள் முடிந்தே போனது. கட்சியின் கொள்கை எத்தனை மக்களைச் சென்றடைகிறது என்பது முக்கியம். எண்ணிக்கை அல்ல. கடந்த தேர்தலில் முக்கிய முடிவு எடுத்தது நமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதை நோக்கிதான். இன்னும் 6 மாதத்தில் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும். அதற்கான முயற்சி நடந்துவருகிறது. என்எல்சி விரைவில் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது. அதற்காதத்தான் நிலம் எடுக்கும் முயற்சி வேகமாக நடைபெற்றுவருகிறது. அதற்கு பாமக இடம் கொடுக்காது. ஒரு பிடி மண் எடுக்க விடமாட்டோம்" என்றார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.