செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!


புதுடெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி, தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் பல்வேறு முறை நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட முறை அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதாடுகையில், “இந்த வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள், எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். செந்தில் பாலாஜி 13 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இதய அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரை நோய்வாய்ப்பட்டவர் என கூற முடியுமா என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு (ஜூலை 24) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

x