சென்னை: சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.690 கோடி மதிப்பில் 27 மாடி கட்டிடம் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில், புறநகர் மற்றும் நெடுந்தொலைவு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இடையே மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்சில் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில், இதன் அருகே 27 மாடி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக, 3 பிரம்மாண்ட அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பன்னடுக்கு கார் பார்க்கிங் இடம்பெற உள்ளது. 225 கார்கள், 1,643 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 27 மாடி கட்டிடத்தின் கட்டுமானப்பணியை தொடங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளி கடந்த மார்ச்சில் கோரப்பட்டது. தற்போது, இதன் செயல்முறை விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 27 மாடி கட்டிடத்தின் கட்டுமானப்பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: "முதலில், இங்கு ஒரு 33 அடுக்கு கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். பின்னர் சில காரணங்களுக்காக, 31 மாடி கட்டிடமாக மாற்றப்பட்டது.
இதன்பிறகு, அடுக்குமாடி கட்டிடத்துக்குப் பதிலாக இரட்டை கோபுர கட்டிடங்களைக் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்டிடம் 17 தளங்களையும், மற்றொன்று 7 தளங்களையும் கொண்டதாகவும் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் சிக்கல் இருந்ததால், இறுதியில், 27 மாடிகளை கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இங்கு ரூ.690 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் 3 தரை கீழ்தளங்கள், ஒரு தரைத்தளம், 27 தளங்கள் அமைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல்தளம் முதல் 4-வது தளம் வரை வணிக வளாகங்களும், 5-வது தளம் முதல் 24-வது தளம் வரை அரசு அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களும் இடம்பெறும். 25-வது தளம் முதல் 27-வது தளம் வரை சேவை தளங்கள் இடம்பெறும். இந்த பிரம்மாண்ட கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டது. தற்போது, இதற்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் கட்டுமானப்பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு அவர்கள் கூறினர்.