வேலூர்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக, தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், காட்பாடி அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் வாக்காளர்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகன், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க, தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி,உரிய தீர்வு காண உள்ளோம்என கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளிவைத்துள்ளது.
50 முறை பேசியும் பயனில்லை: ஆனால், தமிழக அரசு தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பிடிவாதக்காரர்களிடம் முடியாத காரியமாகும். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துடன், தமிழகம் 50 முறை பேசிவிட்டது. அதற்கு பிறகுதான் ஆணையம் அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை.
முல்லை பெரியாறு அணையைஆய்வு செய்துள்ள கண்காணிப்புக் குழு, விநாடிக்கு 78 லிட்டர் தண்ணீர் மட்டுமே கசிவதாகத் தெரிவித்துள்ளது. சிறிய அளவில்நீர்க்கசிவு ஏற்படுவதால், அணைக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அணை வலுவாக உள்ளது.
அம்மா உணவகத்தை முதல்வர் ஆய்வு செய்தது நாடகம் என்று பழனிசாமி விமர்சித்துள்ளார். நாடகம் குறித்து பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், தற்போது அதிமுகவில் அத்தகைய நாடகம்தான் நடந்து கொண்டுள்ளது.
அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில், ரூ.1,918 கோடி மதிப்புடைய கனிம வளங்கள் கொள்ளை போயிருப்பதாக, அந்த துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் கொள்ளை, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.