தமிழகத்தில் இன்று பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்: தொடங்குகிறது!


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேrவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10 -ம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை 29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அதன்படி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதலில் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்குக் கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் 111. எனினும் இந்தப் பிரிவில் 664 இடங்கள் உள்ளதால் எல்லோருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான தகுதியான தேர்வர்கள் 282 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 38 இடங்கள் உள்ளன.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்கள் உள்ள நிலையில், 11 மாணவர்கள் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளனர். ஜூலை 23-ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x