பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்


முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: மத்திய அரசு நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியறுத்தியுள்ளார்.

நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவுசாலை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.10 ஆண்டுகளாக, வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

கிராமப்புற, நகர்ப்புற வீட்டுவசதி திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அகழாய்வு பணி: இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவை மேற்கொள்காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

தடைகளைக் கடந்து தரவுகளை சேகரிக்கிறோம். மூடியுடன் பானை,பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல், ஆணிஎன இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதி செய்கிறது.

இந்திய துணை கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்பட பணிகளைத் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x