மேட்டுப்பாளையம் அருகே பிடிபட்ட 12 அடி நீள ராஜநாகம் வனத்தில் விடுவிப்பு


மீட்கப்பட்ட ராஜநாகம்

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய புதரில் இருந்த சுமார் 12 அடி நீள ராஜநாகம் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலப்பட்டி கிராமம் எம்ஜிஆர் நகரில் வனப்பகுதியை ஒட்டியுள்ள புதரில் ராஜநாகம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ராஜநாகம் இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு இன்று தகவல் அளித்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மனோஜ் தலைமையில், வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மோனுபாய், காஜா மொய்தீன், தொழில் முறை சார்ந்த பாம்பு பிடி வீரர்களுடன் அங்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர் வன எல்லையில் புதருக்குள் பதுங்கி இருந்த 12 அடி நீள ராஜநாகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி ராஜநாகத்தை பாம்பு பிடி வீரர்கள் மீட்டு பையில் அடைத்தனர்.

மீட்கப்பட்ட ராஜ நாகம் பெண் என்பதும், சோர்வாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வனச்சரகர் மனோஜ் கூறும்போது, “அதிக ஈரமான பகுதியில் மட்டுமே வாழும் ராஜநாகம் மழையின் போது வழிதவறி வந்திருக்கலாம். அந்த ராஜநாகம் சுமார் 12 அடி நீளமும், 6 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட குஞ்சப்பனை என்ற ஈரம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது” என்றார்.

x