கோவையில் இந்து முன்னணியினர் நூற்றுக்கணக்கானோர் கைது


இந்து முன்னணி சார்பில் கோவை காந்தி பார்க் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

கோவை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்து கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சமர்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி காந்தி பார்க், மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் சரிவர பாரமரிக்கப்படுவதில்லை, கோயில் சொத்துக்கள் சரிவர பாதுகாக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

காந்திபார்க் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் சிறப்புரையாற்றினார். கோவை கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

x