புதுப்பொலிவு பெறும் வைகை ஆற்று படித்துறைகள்: குப்பை கொட்டுவோரை கண்டறிய காமிரா வைக்கவும் முடிவு


மதுரை: மதுரையில் வைகை ஆற்றின் படித்துறைகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டு அவைகளை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு குப்பை கொட்டுவோரை கண்காணிக்க காமிரா வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்ந்தோடி, விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கு பயன்படுகிறது. கடந்த காலத்தில் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் நீராடுவதற்கு கிராமங்களை ஒட்டி ஓடிய இந்த ஆற்றின் கரைகளில் படித்துறைகள் அமைத்துள்ளனர்.

திருவிழா காலங்கள் மட்டுமில்லாது அன்றாடமும் மக்கள், இந்த படித்துறைகளில் இறங்கி நீராடுவார்கள். தங்கள் துணிகளையும் துவைத்து வந்தனர். மேலும் கோவில் திருவிழாக்களுக்கு, பூஜைகளுக்கு ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கும், பக்தர்கள் பால்குடம், சக்தி கரகம் எடுப்பதற்கும் பயன்படுத்தினர். இறந்தவர்கள் அஸ்தியை கரைக்கவும் படித்துறைகளை பயன்படுத்தினர்.

மதுரை மாநகரில் 12 கி.மீ., செல்லக்கூடிய வைகை ஆற்றில் ஆரப்பாளையம் படித்துறை, தத்தனேரி படித்துறை, புட்டுதோப்பு படித்துறை, செல்லூர் எல்ஐசி பாலம் அருகே பெரிய படித்துறை, திருவாப்புடையார் கோவில் படித்துறை, பேச்சியமம்மன் கோவில் படித்துறை, அனுமார் கோயில் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, ஓபுளாபடித்துறை, வெங்கடபதி ஐயங்கார் படித்துறை, கள்ளுக்கடை சந்து படித்துறை, அண்ணா நகர் படித்துறை, மதிச்சியம் படித்துறை போன்ற படித்துறைகள் உள்ளன. காலப்போக்கில் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மக்கள் நீராட, பூஜைகள் செய்வதற்கு வராததால் இந்தப் படித்துறைகளின் பயன்பாடு குறைந்தன. பல இடங்களில் படித்துறைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின.

இந்நிலையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வைகை கரையில் நான்கு வழிச்சாலை அமைத்தபோது பல படித்துறைகள் அகற்றப்பட்டுவிட்டன. மக்கள் குளிக்க சிமெண்ட் படிக்கட்டுகள் அமைத்து சில படித்துறைகளை அமைத்துள்ளனர். தற்போது வைகை ஆற்றில் தண்ணீரும் வராததால் மாநகராட்சி கட்டிய படித்துறைகளையும் மக்கள் பயன்படுத்துவதில்லை. மக்கள் படித்துறைகளில் குப்பைகளை கொண்டு வந்து வீசி செல்கிறார்கள்.

மது பிரியர்கள், மது குடித்துவிட்டு பாட்டில்கள் படித்துறைகளில் வீசி செல்கிறார்கள். படித்துறைகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சிறுநீர் கழிக்கின்றனர். அதனால், ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கால் வைத்து இறங்க முடியாத அளவிற்கு பராமரிப்பு மோசமாக இருந்தது. இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன், மாநகராட்சி நிர்வாகம், மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வரையுள்ள படித்துறைகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

வைகை ஆற்றின் படித்துறை கரைப்பகுதியை, பயணிகள் பலரும் குப்பைகள் வீசும் மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதியாக மாற்றியிருந்தனர். இந்த படித்துறைகள் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடித்து புதுப்பொலிவுப்படுத்தும் பணிகள் நடக்கிறன. படித்துறைகளில் மக்கள் குப்பை கொட்ட முடியாதவறு அழகுப்படுத்தும் பணியும் நடக்கிறது.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ''வைகை ஆற்றின் படித்துறைகள் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. இதனை யார் பராமரிப்பது என்பதில் பொதுப்பணித்துறையும், மாநகராட்சிக்கும் இடையே குழப்பம் இருந்து வருகிறது. தற்போது மழை பெய்யும்போதும், வைகை அணையில் தண்ணீர் திறக்கும்போதும் ஆற்றில் தண்ணீர் வருகிறது. அந்த நேரங்களில் இந்த படித்துறைகளை மக்கள் பயன்படுத்த, நிரந்தரமாக பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும். படித்துறைகளில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து போலீஸில் புகார் செய்வதற்கு, இந்த பராமரிப்பு பணிக்கு உதவி செய்யும் ஸ்டார் ப்ரண்ட்ஸ் டிரஸ்ட் நிறுவனம், கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்துள்ளது.'' என்றார்.

x