தனியார் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்புநில வாய்க்கால்கள் முழுமையாக மீட்பு @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரியில் மாங்குரோவ் சதுப்பு நிலங்கள் வழியாக செல்லும் பாசன வாய்க்கால்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் முழுமையாக மீட்டுள்ளது. வாய்க்கால்களை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கை விரைவில் தீர்ப்பாயத்துக்கு தரப்படவுள்ளனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியில் மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகளை அழித்து இரண்டு பிரதான நீர் வழித்தடங்களையும் மூடி ஆக்கிரமித்து செல்வாக்கு மிகுந்த தனி நபர்கள் சாலை அமைத்துள்ளனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற இந்திய வனத்துறை அதிகாரி தேவராஜ் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் குறைதீர்க்கும் பிரிவுக்கு புகார் அளித்தார்.

இந்து தமிழ் திசையில் வந்த ஒரு செய்தி கட்டுரையின் அடிப்படையில் தேவராஜ் அளித்த புகாரை அடிப்படையாக வைத்து, பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சதுப்புநிலங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்ததை விசாரிக்க குழுவை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை விசாரிக்க துணை ஆட்சியரின் (வடக்கு) கீழ் ஒரு குழுவை அமைத்தார். இக்குழுவில் நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கடலோர மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் இருந்தனர். குழுவின் விசாரணையில் சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாங்குரோவ் காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து போடப்பட்ட சாலைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை செய்து முடித்துள்ளனர்.

இதுபற்றி அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "4.2 மீட்டர் அகலம் கொண்ட 300 மீட்டர் நீளமுள்ள வாய்க்காலில், வாய்க்காலுக்குள் ஜல்லிகளை கொட்டி, சதுப்பு நிலங்களில் மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை குழு கண்டறிந்துள்ளது. வாய்க்கால் அருகே ஒரு கதவும் கட்டப்பட்டது. அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், நீர் வழித்தடங்களை பழைய நிலைக்கு மீட்டுள்ளோம். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சமர்ப்பிக்கப்படும்'' என்று குறிப்பிட்டனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "நீர் வழித்தடத்தை வெட்டி சதுப்புநிலங்களை அழிப்பதே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். சதுப்புநிலம் அருகே குறிப்பிட்ட சில பகுதிகளில், வேலிக்கு பச்சை வண்ணம் பூசி, வனத்துறைக்கு சொந்தமான நிலம் என காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும், முழுப் பகுதியும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1-ன் கீழ் வருகிறது. சதுப்புநிலப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது மிகப்பெரிய மீறலாகும். விரிவான விசாரணை தேவை. 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கிய பிறகு, இந்தக் காடுகள் அலை மற்றும் அரிப்புகளிலிருந்து கரையைப் பாதுகாத்தபோது சதுப்புநிலங்களின் முக்கியத்துவம் மேலும் வளர்ந்தது. அதை மீறி இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது" என்றனர்.

x