புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வரும் 27-ம் தேதி நாட்டின் பிரதமர் தலைமையில் கூட்டப்பட உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, புதிய திட்டங்களை கொண்டு வருதல், மாநிலத்துக்கு தேவையான திட்டங்களுக்கு உரிய நிதி உதவி கோருதல், மாநிலத்தினுடைய வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக ஒவ்வொரு மாநில முதல்வர்கள் வரைவு திட்டங்களை தயாரித்து பிரதமரிடம் எடுத்துரைத்து அந்த மாநிலத்தினுடைய வளர்ச்சித் திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற கூட்டங்களை பயன்படுத்திக் கொள்ளகின்றனர்.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் இதுபோன்ற கூட்டங்களில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த முதல்வரும், தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் முதல்வரும் கலந்து கொள்வதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாவை நம்பி உள்ள நாம், இங்கு சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்காக மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் போதிய திட்டங்களை போட வேண்டும். அதேபோன்று புதுச்சேரி மாநிலத்துக்கான விமானநிலைய விரிவாக்கத்தை மத்திய அரசின் துணையோடு செயல்படுத்த வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் அவசியம் விமான நிலையம் அமைக்க வேண்டும். சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இருப்பு பாதை போடப்பட்டு ரயில் மூலம் சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்க வேண்டும். கரசூர் சேதராபட்டில் அரசால் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கைவிடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தை மீண்டும் அங்கு கொண்டு வர மத்திய அரசிடம் புதிய நிதி பெற வேண்டும்.
நகரத்தின் பல பகுதிகளில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும், பழமை வாய்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அதனை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாநிலத்தின் வளர்ச்சி நிலை குறித்தும், நம்முடைய மாநில வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், மாநிலத்தின் பல்வேறு தேவைகள் அவசியமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சம்பந்தமாகவும் ஒரு திட்ட வரைவை புதுச்சேரி அரசு தயார் செய்ய வேண்டும்.
வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில் கூட்டப்படுகின்ற இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கட்டாயம் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில தேவைகளை, மத்திய அரசிடம் ஆதாரத்துடன் எடுத்துரைத்து மாநில வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்.
மத்திய அரசு நிதி வழங்க தயாராக இருந்தும் புதுச்சேரி அரசு அது சம்பந்தமான திட்டங்களை பயன்படுத்த தவறி உள்ளதால் மத்திய அரசினுடைய திட்டப் பணிகளுக்கான நிதி கூட புதுச்சேரி மாநிலத்துக்கு பெறுவதில் மிகுந்த சங்கடங்கள் ஏற்படுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையே புதுச்சேரி அரசு வீண் அடித்துள்ளது." இவ்வாறு அன்பழகன் கூறினார்.