மேட்டூர் பாலமலை கிராமங்களில் கள்ளச்சாராய தடுப்பு குறித்து மாவட்ட எஸ்.பி. விழிப்புணர்வு


மேட்டூர் அருகே பாலமலையில் சுண்டக்காய்மேடு பகுதியில் பொதுமக்களுக்கு கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை கிராமங்களில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) ராஜேஷ் கண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்ட எல்லையான மேட்டூரை அடுத்த கொளத்தூர், பாலமலை பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய வனப்பகுதியில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவை கண்ணாமூச்சி கிராமம் வழியாக மேட்டூர், சேலம் பகுதியிலும், குருவரெட்டியூர் வழியாக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) ராஜேஷ் கண்ணன் தலைமையில், மதுவிலக்கு போலீஸார், கொளத்தூர் காவல் நிலைய போலீஸார் உள்பட 40-க்கும் மேற்பட்டோர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் பாலமலையில் உள்ள கிராமங்களில் அதிரடியாக சாராய சோதனையில் ஈடுபட்டனர். பாலமலையில் உள்ள கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குச் சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? சாராய ஊறல் போடப்பட்டுள்ளதா? என சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வனப்பகுதியில் உள்ள நீரோடை பகுதியிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை முதல் நடைபெற்று வரும் சாராய வேட்டையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கெம்மம்பட்டி, ராமன்பட்டி, சுண்டக்காய்மேடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் சாராய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, பாலமலை கிராமங்களில் பொதுமக்களிடம், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சினால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினார்.

x