புதுச்சேரியில் திராவிடமாடல் ஆட்சி சாத்தியமா?


வி.எம்.சி.சிவகுமார் இல்ல மணவிழாவில்...

’’புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவை, அங்கே நிச்சயம் திமுக ஆட்சி அமையும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிபடச் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் இப்படிப் பேசியதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் திடீர் பிரகடனம் இருக்கிறது.

கடந்த வாரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரியைப் பொறுத்தவரை ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி. இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயார்” என்று திருவாய் மலர்ந்தார். அதற்குத்தான். ‘சரி அப்படியே செய்யுங்கள், ஆளை விடுங்கள்’ என்பதாக ஸ்டாலின் அவருக்கு இப்படிச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு ஆதங்கமும் ஸ்டாலினுக்கு இருக்கலாம். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்ததோடு மட்டுமல்லாமல் பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அடுத்ததாக குஜராத்திலும் பிள்ளையார் சுழிபோட்டு தனது கணக்கை துவங்கி தேசிய கட்சி அந்தஸ்துக்கு மாறியிருக்கிறது.

ஆனால் 1974-ம் ஆண்டிலேயே தமிழகம், புதுச்சேரி என இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்த திமுக, புதுச்சேரியில் தனது செல்வாக்கை இழந்தது மட்டுமல்லாமல் அங்கு அண்மை தேர்தல்களாக காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கு முடிவு கட்ட விரும்பினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். புதுச்சேரிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், “30 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை என்றால் நான் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று சூளுரைத்தார். அந்த அளவுக்கு புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற நம்பிக்கையோடு அவரிருந்தார். ஆனால், அதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. காங்கிரஸ் கூட்டணி அவரை யோசிக்க வைத்தது.

அதன் காரணமாக, ஜெகத்ரட்சகனை கூப்பிட்டு அடக்கி வைத்தார் ஸ்டாலின். அப்போது மட்டும் ஜெகத்ரட்சகனை சுதந்திரமாக விட்டிருந்தால் கடந்த முறையே புதுவையில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கும். அந்த நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் உரசல் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் சற்றே யோசித்தது தான் பாஜகவை அங்கு நிலைகொள்ளச் செய்துவிட்டது.

அதே ஜெகத்ரட்சகன் புதுச்சேரியில் திமுக ஆட்சி என்பதில் இன்னமும் உறுதியாக இருக்கிறார். அங்கு அவருக்கு அழுத்தமான பின்னணியும், ஏகப்பட்ட தொழில்களும் இருக்கிறது. அதனால் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக ஆட்சி அமைப்பது எளிது என்பதும், அதற்கான உத்திகளும் அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் கட்சி செல்வாக்கு என்பது அங்கு வேலைக்கு ஆகாது. தனி மனித செல்வாக்குதான் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

கடந்த தேர்தலில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்ட நமச்சிவாயம், செல்வந்தர்களான ஜான்குமார், அவரது மகன் விவிலியன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம் மட்டுமல்லாமல் ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கால்தான் அங்கு வென்றார்கள். அப்படி தொகுதியில் செல்வாக்குமிக்க ஆட்களை களமிறக்கி தொகுதிகளை கைப்பற்றும் வித்தை ஜெகத்ரட்சகனுக்குத் தெரியும்.

அதற்காகத்தான் புதுவை திமுக அமைப்பாளர் வி.எம்.சி.சிவகுமாரின் இல்லத் திருமணவிழாவில் ஸ்டாலினிடம் மீண்டும் வேண்டுகோள் வைத்தார் ஜெகத். சென்றமுறை அவர் சவாலாக விடுக்கப்போய்தான் மறுக்கப்பட்டது. இந்த முறை ஸ்டாலின் முன்னிலையில் வேண்டுகோளாக வைக்கப்பட்டதால் அது ஏற்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தேவை என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அங்கே கூட்டணி அமைச்சரவை என்ற பெயரில் பதவியை பிடித்துவைத்துக் கொண்டு பாஜகவினரே அனைத்தையும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மதவாத செயல்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. முதல்வர் ரங்கசாமியால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

புதுச்சேரியில் பாஜக அதிகாரம் செலுத்தினால் அது தமிழகத்திலும் தீயாக பரவும் என்பதை ஆளுநர் விவகாரங்கள் உள்ளிட்டவை மூலமாக உணர்ந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதனால் தான் எச்சரிக்கையுடன் எதிர்காலத்தை திட்டமிடுகிறார் அவர். பாஜகவின் அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் என்றால் அது திமுகவால் மட்டுமே முடியும். பாஜகவின் கூட்டணித்தோழனான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கூடிய விரைவில் பாஜக கபளீகரம் செய்து விடும் என்பதும் ஸ்டாலினுக்குத் தெரியும். ஆகவே தான், ‘புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி’ என்ற அஸ்திரத்தை இப்போதே எடுத்து வீசி இருக்கிறார்.

“புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் ஆட்டிப் படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் பேசியதன் உள்ளர்த்தமும் அதுதான்.

பாஜகவை வீழ்த்தவும், சமாளிக்கவும் அங்கு காங்கிரஸ் வலுவாக இல்லை. அதுவும் நாராயணசாமியால் அங்கே காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்புக்கே போய்விட்டது. காங்கிரஸுக்கு வலு இல்லை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபிக்கப்பட்டு விட்டது. 15 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 13 இடங்களில் போட்டியிட்ட திமுக ஆறு இடங்களில் வென்றது. இன்னும் அதிக இடங்களில் நின்றிருந்தால் ஆட்சி அமைத்துவிடலாம் என்கிறபோது அந்த கூடுதல் இடங்களை குறிவைத்து திமுக வேலைசெய்ய வேண்டும். காங்கிரஸை உடன் வைத்திருந்தால் அது நடக்காது. அதனால் தான் அங்கு திமுக ஆட்சி என்ற இலக்கை முன்வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

திமுக ஆட்சி என்பது ஒன்றும் புதுச்சேரிக்கு புதிதில்லை. அக்கட்சி முதன்முதலாக 1969-ல் நடைபெற்ற தேர்தலில் குபேர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 15 தொகுதிகளைப் பெற்றது. அதன்பின்னர் 1974 தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. இருப்பினும் அதனை ஆளவிடாமல் அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 1980-லும், அதற்கடுத்து 1990 மற்றும் 1996 தேர்தல்களில் வெற்றிபெற்று புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நம்பிக்கை இருப்பதால் தான் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என தெம்போடு சொல்கிறது திமுக.

நாராயணசாமி

புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஸ்டாலினின் பிரகடனம் குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் எந்தத் தவறுமில்லை. அனைத்துக் கட்சிகளுமே தங்களுடைய ஆட்சி வரவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அப்படித்தான் சமீபத்தில் குஜராத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட ஆட்சியமைப்போம் என்று கூறினார்கள்.

ஆனால், புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் எப்போதும் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி அமைப்பது வழக்கம் என்பதால் நான் அப்படி குறிப்பிட்டேன். அது என்னுடைய விருப்பம். திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதனால் அவர் அப்படி பேசியிருக்கிறார். அவர்களுடைய விருப்பத்தை சொல்வதில் எந்த தவறும் இல்லை” என்று மையமாகவே பேசி முடித்துக்கொண்டார் நாராயணசாமி.

வலுவான எந்த அடித்தளமும் இல்லாமலேயே புதுச்சேரியின் கூட்டணி அமைச்சரவைக்குள் தந்திரமாக வந்திருக்கிறது பாஜக. அப்படி இருக்கையில், ஜெகத்ரட்சகன்கள் கையில் இருக்கும் போது, ஏற்கெனவே பலமுறை ஆண்ட கட்சியான திமுகவால் மீண்டும் புதுச்சேரியில் ஆட்சிக் கட்டிலில் அமருவது என்பது அத்தனை கஷ்டமா என்ன?

x