கடலூர்: மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறையில் இருந்து கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கடலூர், சிதம்பரம் பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கம், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப் பட்டன.
இந்நிலையில் கடந்த மார்ச் 7-ம் தேதி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனால் ரயில் பயணிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்யப்படவில்லை.
இது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த ஜூன் 25-ம்தேதி விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 19) மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட்டது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்க தலைவர் முகமது ரியாஸ், நிர்வாகி சிவராம வீரப்பன், அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சேகர், காங்கிரஸ் நகர தலைவர் மக்கின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்தமிழ் ஒளி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ரயிலை வரவேற்று இனிப்பு வழங்கினர்.
இதுபோல் கடலூர் துறைமுகம் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் பயணிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலார் அமர்நாத், பொதுநல இயக்கத்தை சேர்ந்த ரவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் திருமார்பன், குடியிருப்போர் சங்க மருதவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
தினசரி இயங்கும் இந்த ரயில்மாலை 3.40 மணிக்கு கடலூர் துறைமுகம் சந்திப்பில் புறப்பட்டு பெங்களூருவுக்கு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கும், மைசூருக்கு காலை 8 மணிக்கும் சென்றடையும். மறு மார்க்கமாக கடலூர் எக்ஸ்பிரஸ் மாலை 4.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு, இரவு 7 மணிக்கு பெங்களூரு சென்று, மறுநாள் காலை 8.35 மணிக்கு கடலூர் துறைமுகம் சந்திப்பு வந்தடையும். சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி, ஈரோடு, ஓசூர், தருமபுரி வழியாக இந்த ரயில் இயங்கும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.