சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு


சென்னை: மைக்ரோ சாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்று 16 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடங்கியது. இதனால், நேற்று முன்தினம் பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை இண்டிகோ, ஆகாஷா, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானங்களில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. போர்டிங் பாஸ்களை கைகளால் ஊழியர்கள் எழுதி கொடுத்ததால், அதனை பயணிகள் பெற்று விமானங்கள் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. குறிப்பாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் வருகை, புறப்பாடு என 32 விமானங்களின் சேவை ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் வருகை புறப் பாடு என 16 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதம், ரத்து, போர்டிங் பாஸ்களை பெற நீண்டநேரம் வரிசையில் காத்திருப்பு போன்றவற்றால் இரண்டாவது நாளாக பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

நேற்று மதியம் 12 மணிக்கு பின்னர், விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைய தொடங்கியது. வழக்கம் போல், கம்ப்யூட்டர் மூலம் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

x