அம்மா உணவகத்தில் முதல்வர் ஆய்வு குறித்து இபிஎஸ், தினகரன் விமர்சனம் - மேயர் பிரியா கண்டனம்


சென்னை: முதல்வரின் அம்மா உணவக ஆய்வு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். அதற்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அம்மா உணவகங்களுக்கு புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி, உணவகங்களைப் புனரமைக்க ரூ.14 கோடி என ரூ.21 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிதி குறைப்பு- தமிழகத்தில் 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை 3-ல் ஒரு பங்காக குறைத்தனர். அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவில்லை. ஏழை மக்கள் உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து, பல அம்மா உணவகங்களை மூடினர்.

இந்நிலையில், தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து, அங்கு தரமான உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆய்வு என்ற பெயரில் முதல்வர் நாடகத்தை நடத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இனியாவது ஜெயலலிதா ஆட்சியில் செயல்பட்டதைப் போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குளறுபடியை களைய வேண்டும்- பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடங்களாக மாற்றப் படுகின்றன. காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் காலை உணவுகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், அதை குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே உட்கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே, அம்மா உணவகங்களை மேம்படுத்தி ஏழை மக்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதோடு, முதல்வரின் காலை உணவுத்திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

மேயர் பிரியா கண்டனம்: இதற்கிடையே, பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சனம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு மனமில்லை. தனிப் பெருந்தலைவராக, மனிதநேயராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.

அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ இருந்ததில்லை. திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதியதலைமைச் செயலகம் உட்படஅதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை என்பதைமக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும், ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x